Saturday, November 8, 2014

உப்பு புளியுடன் கொஞ்சம் விஷமும் சாப்பிடுகிறோம்.


ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.  தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன! கோவில்பட்டியில் 
''மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!'' 
 ஐந்தாம் தலைமுறை?  
 தலைமுறை 1:
''ரண்டாம் உலகப் போரின் முடிவில், எஞ்சிய குண்டுகளில் இருந்த ரசாயனங்களைக்கொண்டு, உலகின் முதல் பூச்சிக்கொல்லி தயாரிக்கப்பட்டது. டி.டி.டீ (DDT- Dichloro Diphenyl Trichloro ethane) என்ற அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் பால் முல்லர். அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. கொசுவை அழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இதுதான், முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி. அதாவது அதற்கு முன்பு இந்தப் பூமியில் பூச்சிகளைக் கொல்வதற்கு என செயற்கை வேதி மருந்துகள் எதுவும் இல்லை. இந்த டி.டி.டீ, 'ஆர்கனோ குளோரைட்’ (organo chloride) என்ற வகையைச் சேர்ந்தது. இது பூச்சிகளின் மீது தொடு நஞ்சாகவும், ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும் செயல்படும். நம்மைப்போல பூச்சிகள் மூக்கின் வழியே சுவாசிக்காது. உடல் முழுக்க இருக்கும் நுண்துளைகள் மூலமாகவே சுவாசிக்கும். அப்படி சுவாசிக்கும்போது, இந்தப் பூச்சிக்கொல்லி விஷம், துளைகள் வழியாக அதன் உடலுக்குள் சென்று பூச்சியை அழிக்கும். இதைத்தான் 'தொடு நஞ்சு’ என்கிறோம். பயிர்களை உண்பதன் மூலம் பூச்சிகளின் உடலுக்குள் நஞ்சு செல்வதை 'ஊடுருவும் நஞ்சு’ என்கிறோம். இந்த இரண்டுவிதமான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை, பூச்சிகள் சில ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டன.
தலைமுறை 2:
முதல் தலைமுறை பூச்சிக்கொல்லியான டி.டி.டீ-க்கு பூச்சிகள் பெப்பே காட்டியதைத் தொடர்ந்து, அதைவிட வீரியமான புதிய பூச்சிமருந்தைக் கண்டுபிடித்தார்கள். அப்படி அறிமுகமான 'ஆர்கனோ பாஸ்பரஸ்’ (organo phosphorus) வகையைச் சேர்ந்ததுதான் இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கும். மனிதனுக்கு இருப்பதுபோல மூளை என்ற அமைப்பு பூச்சிகளுக்குக் கிடையாது. முதுகுத் தண்டுவடத்தில் இருந்துதான் நரம்புகள் உடல் முழுக்கப் பரவும். அதனால் தண்டுவடத்தைத் தாக்கும் வகையில் இந்த இரண்டாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆயின. இதை எதிர்த்து உயிர் வாழும் ஆற்றலையும், ஒருசில ஆண்டுகளிலேயே பூச்சிகள் பெற்றுவிட்டன!
தலைமுறை 3:
'கார்பமேட்’ (carbamate) என்பது மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி வகை. இந்த நஞ்சு பயிர்களில் தெளிக்கப்பட்ட பிறகு, பூச்சிகள் பயிரை உண்ணும்போது, இது பூச்சியின் குடலுக்குள் சென்றுவிடும். அங்கேயே தங்கியிருந்து பூச்சியை சாகடிக்கும். சில வருடங்களில் இதையும் சமாளிக்கும் எதிர்ப்புச் சக்தியை ஏகமாகப் பெற்றுவிட்ட பூச்சிகள், மனிதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன!
தலைமுறை 4:
பூச்சிகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற மனநிலையில் அறிமுகம் ஆனதுதான் 'சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ்’ (synthetic pyrethroid) என்ற வகையைச் சேர்ந்த நான்காம் தலைமுறை நஞ்சு. புகை நஞ்சாகச் செயல்படும் இதன் வருகையும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. நாம் வீடுகளில் உபயோகிக்கும் ஆல் அவுட், குட்நைட் போன்ற கொசு விரட்டிகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். உண்மையில் கொசுவத்திகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் மயக்கம் அடையும் கொசுக்களைப் பிடித்து அழிக்க வேண்டும் என்பதுதான் கொசு விரட்டிகளின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கொசு விரட்டிகளை எரியவிட்டு, அறைக் கதவுகளை அடைத்துவிட்டு, உள்ளே படுத்து உறங்குகிறோம். இதனால், கொசுக்கள் மயக்கம் அடைகிறதோ இல்லையோ மனிதர்களுக்குள் செல்லும் புகை ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்குகிறது. அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் புகையை சுவாசிக்கும்போது, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது. 1985-ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்தின இந்த நான்காம் தலைமுறை நஞ்சுகள். 'நாங்க எதையும் எதிர்த்து நிற்போம்’ என்ற ரீதியில் இதையும் தாண்டி தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்தன பூச்சிகள்!
தலைமுறை 5:
'நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சுக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப் பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறது. உதாரணமாக ஐந்தாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆன பிறகு, தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் பூக்களின் வாசனை மற்றும் தாங்கள் பறந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றன. தங்கள் கூட்டுக்குச் சென்று சேர முடியாமல் இடையிலேயே இறந்துவிடுகின்றன. இதனால் தேனீக்கள் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருகிறது. இதனால் இந்த வகை பூச்சிக்கொல்லிக்கு, ஐரோப்பிய யூனியன் 2012ம் ஆண்டு தடை விதித்திருக்கிறது.''
இப்படி கேட்க, நாம் ஒட்டுமொத்தமாக ஒரு விஷச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ என நடுக்கமாக இருக்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேனீக்கள், உயிர்ச்சூழல் கண்ணியில் மிகவும் முக்கியமான ஓர் உயிரினம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகை தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பெரும்பாலும் தேனீக்கள் மூலம்தான். தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை; தாவரங்கள் இல்லை; உணவு இல்லை; பிறகு மனிதகுலமே இல்லை. இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.

தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்’ என்பது அவரது பகீர் எச்சரிக்கை!  இப்போது நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் எழுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து உயிர்வாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிடுகின்றன என்றால், மனிதர்களும் இத்தகைய எதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் அல்லவா? என்ன விஷயம் எனில், மனிதர்களின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள், 70 ஆண்டுகள். ஆனால், பூச்சிகளின் ஆயுட்காலம் ஒருசில வாரங்கள்தான். ஒரே ஒரு வருடத்தில் பூச்சிகள் 20 தலைமுறைகளைக் கடந்திருக்கும். ஐந்து ஆண்டுகளில் 100 தலைமுறைகளைக் கடந்துவிடும். இதனால் பூச்சிகள், இந்தப் பூச்சிமருந்துகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வெகுவிரைவில் பெற்றுவிடுகின்றன. மனிதர்களால் அது முடியாமல் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த 'அல்சைமர்’ என்ற மறதி நோய் இன்றைக்கு 60 வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறது. பலர் ஏதோ ஒரு வேளையாகச் சென்றுவிட்டு, 'எதற்காக இங்கு வந்தோம்?’ என இடையில் நின்று யோசிப்பதைப் பார்க்கலாம். ஐந்தாம் தலைமுறை நஞ்சுகளால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதன் பக்கவிளைவு இது. மனித உடலுக்குள் செல்லும் நஞ்சுகளைச் செயல் இழக்கச் செய்யும் பணியைச் செய்வது ஈரல். அதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? தினமும் உணவின் மூலமாக உடலுக்குள் நஞ்சு தொடர்ந்து செல்லும்போது, ஈரலின் செயல்படும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் மருத்துவர்கள், இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வேகமாகக் குறைந்து, உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகிறது என்கிறார்கள்.
'எல்லாம் சரிதான். ஆனால், பூச்சிக்கொல்லி தெளிக்காவிட்டால் பயிர்களை பூச்சிகள் கபளீகரம் செய்துவிடுமே... அதற்கு என்ன செய்வது?’ எனக் கேள்வி எழும். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சி தாக்குதலைத் தடுக்க முடியும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதுபோல, பூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்க முடியும். சில பூச்சிகள் பயிர்களை உண்பதுபோல, சில பூச்சிகளுக்கு மற்ற பூச்சிகள்தான் உணவு. இவற்றை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் என்கிறார்கள். இந்த நன்மை செய்யும் பூச்சிகளை நமது வயலுக்கு வரவழைத்துவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்!''  என்கிறார் வல்லுநர் நீ.செல்வம். இந்த இடத்தில் நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
'ஒரு விளைநிலத்தில் 100 வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்றால், அதில் 10 பூச்சிகள் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். 90 பூச்சிகள் நமக்கு நண்பர்கள். அந்த 10 பூச்சிகளை அழிக்கிறோம் என 90 பூச்சிகளையும் அழித்ததன் பாவத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். கையில் தொடக்கூட அஞ்சும் எண்டோசல்பானையும், மோனோகுரோட்டோபாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பயிர்கள் மீது தெளித்துவிட்டு, அவை அனைத்து உயிர்களையும் கொன்ற பின், விளைச்சலில் ஊடுருவிக் கலந்த பின், அதை மேலோட்டமாகக் கழுவிவிட்டு தின்பதன் விளைவுதான் இத்தனை நோய்கள். ஒரு காலத்தில் வயல்வெளி முழுக்க தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளினால் இன்று தட்டான் பூச்சிகள் காணாமல்போய்விட்டன. தட்டான் பூச்சிகள் உணவாக அதிகம் உண்டது கொசு முட்டைகளைத்தான். இன்றைக்கு தட்டான் பூச்சிகளை அழித்து, கொசுக்களைப் பெருகச் செய்து, அதில் இருந்து தப்பிக்க மின்விசிறியைப் போடுகிறோம். அதற்குத் தேவையான மின்சாரத்துக்கு நிலக்கரியை எரிக்கிறோம்; அணு உலை அமைக்கிறோம். ஆனால், எந்த மருந்தாலும் இன்னும் கொசுவை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை!’ என மனம் வெதும்பிச் சொன்னார்.
இப்போது நம் முன்னே இருப்பது 'இயற்கையா... செயற்கையா?’ என்ற எளிய கேள்வி. உயிர்போகும் ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து, ஆகக்கூடிய அனைத்து வழிகளிலும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும், இயற்கைக்கு இசைவான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதும்தான் இதற்கு சாத்தியமான, நிரந்தரமான தீர்வு!