Tuesday, December 2, 2014

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக்?


தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே,  நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.

ஹோட்டல்களில் நாம் சாப்பிடுவது இட்லி, தோசை, சாதம் மட்டுமல்ல; கூடவே பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்களும்தான். உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள். ‘நல்ல பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.
பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம். நம் அன்றாட வாழ்வில் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக் ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக் மயம். பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும் போது பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்து விடும். இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும் நம் உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமான நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன” என்றார். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவோடு கலந்து பின்விளைவுகளை  ஏற்படுத்துகின்றன. 

“பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள் மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1  என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல் பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக மாறுகிறது.
தாலேட்ஸ் உள்ள பி்ளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது” ‘‘ஹோட்டலில் 40 மைக்ரான்கள் கொண்ட கவர்களில்தான் உணவை பேக் செய்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆவி பறக்க, சூடான சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்யும் கவர்கள் நிச்சயம் அதிக மைக்ரான்களால் தயாரிக்கப்படுவது இல்லை. கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக் கோளாறு, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்து ஹோட்டல் உணவையே பார்சல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

பார்சல் உணவைப் பாதுகாப்பாய் மாற்ற... அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் கவர், பேப்பர் கப் என எந்த உணவு கவராக இருந்தாலும் அதில் ஐ.எஸ்.ஐ தர முத்திரை  உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். 40 மைக்ரான்கள் அடர்த்தி கொண்ட கவரில் பார்சல் செய்து தரும்படி கேட்கலாம். பிளாஸ்டிக் கவர்களிலேயே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய கவர்கள் என பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. 40 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழ் என்று உள்ள கவரை மட்டுமே ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரில் வைக்கலாம்.
ஹோட்டலில் பார்சல் வாங்கும் முன் சாப்பாட்டை, வாழை இலையில் கட்டித் தரச் சொல்லுங்கள். சாம்பார், ரசம், பொரியல் எனில் வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பேக் செய்து தர வேண்டும் என  ஹோட்டல் உரிமையாளரிடம் கேளுங்கள்.அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர். அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது. குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free),  தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free)  என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனிக்க  வேண்டும். அவெனில் (Oven) சமைக்க, எவ்வளவு பெரிய  பிராண்ட் தயாரிப்பாக  இருந்தாலும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது.  கண்ணாடிப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டுக்கு வாங்கும் தண்ணீர்  கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்குப் பதில் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், மண் பாத்திரம், இரும்புப் பாத்திரம், செம்புப் பாத்திரங்களைப்  பயன்படுத்தலாம்.
உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாது காக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.
ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு  பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில்  பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. கண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாக கருதப்பட்டு வந்தன. எனினும் சில நிறுவனங்கள் அதிகளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில்  காரீயம் (led) கலக்கிறார்கள். இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை.

ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.
1 Polyethylene terephtalate  (PETE or PET) -  தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள். 
4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள்.  சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
   குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  2, 4, 5
 குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே          பயன்படுத்தக்கூடியது - 1
   மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  3, 6, 7

Saturday, November 8, 2014

உப்பு புளியுடன் கொஞ்சம் விஷமும் சாப்பிடுகிறோம்.


ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.  தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன! கோவில்பட்டியில் 
''மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!'' 
 ஐந்தாம் தலைமுறை?  
 தலைமுறை 1:
''ரண்டாம் உலகப் போரின் முடிவில், எஞ்சிய குண்டுகளில் இருந்த ரசாயனங்களைக்கொண்டு, உலகின் முதல் பூச்சிக்கொல்லி தயாரிக்கப்பட்டது. டி.டி.டீ (DDT- Dichloro Diphenyl Trichloro ethane) என்ற அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் பால் முல்லர். அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. கொசுவை அழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இதுதான், முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி. அதாவது அதற்கு முன்பு இந்தப் பூமியில் பூச்சிகளைக் கொல்வதற்கு என செயற்கை வேதி மருந்துகள் எதுவும் இல்லை. இந்த டி.டி.டீ, 'ஆர்கனோ குளோரைட்’ (organo chloride) என்ற வகையைச் சேர்ந்தது. இது பூச்சிகளின் மீது தொடு நஞ்சாகவும், ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும் செயல்படும். நம்மைப்போல பூச்சிகள் மூக்கின் வழியே சுவாசிக்காது. உடல் முழுக்க இருக்கும் நுண்துளைகள் மூலமாகவே சுவாசிக்கும். அப்படி சுவாசிக்கும்போது, இந்தப் பூச்சிக்கொல்லி விஷம், துளைகள் வழியாக அதன் உடலுக்குள் சென்று பூச்சியை அழிக்கும். இதைத்தான் 'தொடு நஞ்சு’ என்கிறோம். பயிர்களை உண்பதன் மூலம் பூச்சிகளின் உடலுக்குள் நஞ்சு செல்வதை 'ஊடுருவும் நஞ்சு’ என்கிறோம். இந்த இரண்டுவிதமான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை, பூச்சிகள் சில ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டன.
தலைமுறை 2:
முதல் தலைமுறை பூச்சிக்கொல்லியான டி.டி.டீ-க்கு பூச்சிகள் பெப்பே காட்டியதைத் தொடர்ந்து, அதைவிட வீரியமான புதிய பூச்சிமருந்தைக் கண்டுபிடித்தார்கள். அப்படி அறிமுகமான 'ஆர்கனோ பாஸ்பரஸ்’ (organo phosphorus) வகையைச் சேர்ந்ததுதான் இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கும். மனிதனுக்கு இருப்பதுபோல மூளை என்ற அமைப்பு பூச்சிகளுக்குக் கிடையாது. முதுகுத் தண்டுவடத்தில் இருந்துதான் நரம்புகள் உடல் முழுக்கப் பரவும். அதனால் தண்டுவடத்தைத் தாக்கும் வகையில் இந்த இரண்டாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆயின. இதை எதிர்த்து உயிர் வாழும் ஆற்றலையும், ஒருசில ஆண்டுகளிலேயே பூச்சிகள் பெற்றுவிட்டன!
தலைமுறை 3:
'கார்பமேட்’ (carbamate) என்பது மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி வகை. இந்த நஞ்சு பயிர்களில் தெளிக்கப்பட்ட பிறகு, பூச்சிகள் பயிரை உண்ணும்போது, இது பூச்சியின் குடலுக்குள் சென்றுவிடும். அங்கேயே தங்கியிருந்து பூச்சியை சாகடிக்கும். சில வருடங்களில் இதையும் சமாளிக்கும் எதிர்ப்புச் சக்தியை ஏகமாகப் பெற்றுவிட்ட பூச்சிகள், மனிதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன!
தலைமுறை 4:
பூச்சிகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற மனநிலையில் அறிமுகம் ஆனதுதான் 'சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ்’ (synthetic pyrethroid) என்ற வகையைச் சேர்ந்த நான்காம் தலைமுறை நஞ்சு. புகை நஞ்சாகச் செயல்படும் இதன் வருகையும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. நாம் வீடுகளில் உபயோகிக்கும் ஆல் அவுட், குட்நைட் போன்ற கொசு விரட்டிகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். உண்மையில் கொசுவத்திகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் மயக்கம் அடையும் கொசுக்களைப் பிடித்து அழிக்க வேண்டும் என்பதுதான் கொசு விரட்டிகளின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கொசு விரட்டிகளை எரியவிட்டு, அறைக் கதவுகளை அடைத்துவிட்டு, உள்ளே படுத்து உறங்குகிறோம். இதனால், கொசுக்கள் மயக்கம் அடைகிறதோ இல்லையோ மனிதர்களுக்குள் செல்லும் புகை ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்குகிறது. அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் புகையை சுவாசிக்கும்போது, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது. 1985-ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்தின இந்த நான்காம் தலைமுறை நஞ்சுகள். 'நாங்க எதையும் எதிர்த்து நிற்போம்’ என்ற ரீதியில் இதையும் தாண்டி தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்தன பூச்சிகள்!
தலைமுறை 5:
'நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சுக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப் பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறது. உதாரணமாக ஐந்தாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆன பிறகு, தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் பூக்களின் வாசனை மற்றும் தாங்கள் பறந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றன. தங்கள் கூட்டுக்குச் சென்று சேர முடியாமல் இடையிலேயே இறந்துவிடுகின்றன. இதனால் தேனீக்கள் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருகிறது. இதனால் இந்த வகை பூச்சிக்கொல்லிக்கு, ஐரோப்பிய யூனியன் 2012ம் ஆண்டு தடை விதித்திருக்கிறது.''
இப்படி கேட்க, நாம் ஒட்டுமொத்தமாக ஒரு விஷச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ என நடுக்கமாக இருக்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேனீக்கள், உயிர்ச்சூழல் கண்ணியில் மிகவும் முக்கியமான ஓர் உயிரினம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகை தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பெரும்பாலும் தேனீக்கள் மூலம்தான். தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை; தாவரங்கள் இல்லை; உணவு இல்லை; பிறகு மனிதகுலமே இல்லை. இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.

தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்’ என்பது அவரது பகீர் எச்சரிக்கை!  இப்போது நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் எழுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து உயிர்வாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிடுகின்றன என்றால், மனிதர்களும் இத்தகைய எதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் அல்லவா? என்ன விஷயம் எனில், மனிதர்களின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள், 70 ஆண்டுகள். ஆனால், பூச்சிகளின் ஆயுட்காலம் ஒருசில வாரங்கள்தான். ஒரே ஒரு வருடத்தில் பூச்சிகள் 20 தலைமுறைகளைக் கடந்திருக்கும். ஐந்து ஆண்டுகளில் 100 தலைமுறைகளைக் கடந்துவிடும். இதனால் பூச்சிகள், இந்தப் பூச்சிமருந்துகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வெகுவிரைவில் பெற்றுவிடுகின்றன. மனிதர்களால் அது முடியாமல் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த 'அல்சைமர்’ என்ற மறதி நோய் இன்றைக்கு 60 வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறது. பலர் ஏதோ ஒரு வேளையாகச் சென்றுவிட்டு, 'எதற்காக இங்கு வந்தோம்?’ என இடையில் நின்று யோசிப்பதைப் பார்க்கலாம். ஐந்தாம் தலைமுறை நஞ்சுகளால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதன் பக்கவிளைவு இது. மனித உடலுக்குள் செல்லும் நஞ்சுகளைச் செயல் இழக்கச் செய்யும் பணியைச் செய்வது ஈரல். அதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? தினமும் உணவின் மூலமாக உடலுக்குள் நஞ்சு தொடர்ந்து செல்லும்போது, ஈரலின் செயல்படும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் மருத்துவர்கள், இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வேகமாகக் குறைந்து, உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகிறது என்கிறார்கள்.
'எல்லாம் சரிதான். ஆனால், பூச்சிக்கொல்லி தெளிக்காவிட்டால் பயிர்களை பூச்சிகள் கபளீகரம் செய்துவிடுமே... அதற்கு என்ன செய்வது?’ எனக் கேள்வி எழும். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சி தாக்குதலைத் தடுக்க முடியும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதுபோல, பூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்க முடியும். சில பூச்சிகள் பயிர்களை உண்பதுபோல, சில பூச்சிகளுக்கு மற்ற பூச்சிகள்தான் உணவு. இவற்றை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் என்கிறார்கள். இந்த நன்மை செய்யும் பூச்சிகளை நமது வயலுக்கு வரவழைத்துவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்!''  என்கிறார் வல்லுநர் நீ.செல்வம். இந்த இடத்தில் நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
'ஒரு விளைநிலத்தில் 100 வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்றால், அதில் 10 பூச்சிகள் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். 90 பூச்சிகள் நமக்கு நண்பர்கள். அந்த 10 பூச்சிகளை அழிக்கிறோம் என 90 பூச்சிகளையும் அழித்ததன் பாவத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். கையில் தொடக்கூட அஞ்சும் எண்டோசல்பானையும், மோனோகுரோட்டோபாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பயிர்கள் மீது தெளித்துவிட்டு, அவை அனைத்து உயிர்களையும் கொன்ற பின், விளைச்சலில் ஊடுருவிக் கலந்த பின், அதை மேலோட்டமாகக் கழுவிவிட்டு தின்பதன் விளைவுதான் இத்தனை நோய்கள். ஒரு காலத்தில் வயல்வெளி முழுக்க தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளினால் இன்று தட்டான் பூச்சிகள் காணாமல்போய்விட்டன. தட்டான் பூச்சிகள் உணவாக அதிகம் உண்டது கொசு முட்டைகளைத்தான். இன்றைக்கு தட்டான் பூச்சிகளை அழித்து, கொசுக்களைப் பெருகச் செய்து, அதில் இருந்து தப்பிக்க மின்விசிறியைப் போடுகிறோம். அதற்குத் தேவையான மின்சாரத்துக்கு நிலக்கரியை எரிக்கிறோம்; அணு உலை அமைக்கிறோம். ஆனால், எந்த மருந்தாலும் இன்னும் கொசுவை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை!’ என மனம் வெதும்பிச் சொன்னார்.
இப்போது நம் முன்னே இருப்பது 'இயற்கையா... செயற்கையா?’ என்ற எளிய கேள்வி. உயிர்போகும் ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து, ஆகக்கூடிய அனைத்து வழிகளிலும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும், இயற்கைக்கு இசைவான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதும்தான் இதற்கு சாத்தியமான, நிரந்தரமான தீர்வு!

Monday, September 29, 2014

Butter Chicken Masala


பூண்டு குழம்பு!


தேவையான பொருட்கள்: பூண்டு - 10-12 பற்கள் சின்ன வெங்காயம் - 5-6 தக்காளி - 1/2 பொடியாக நறுக்கியது கடுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் வரமிளகாய் - 1 கறிவேப்பிலை - சிறிது புளி - 1 எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு... சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் மல்லி - 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 3 பூண்டு - 3-4 பற்கள் வரமிளகாய் - 1 தக்காளி - 1/2 

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றெலாரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம் தாளிக்க வேண்டும். பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வாக்கி, பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளவு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து 10-15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால்,  பூண்டு புளிக்குழம்பு ரெடி!


Saturday, September 27, 2014

வெண்டைக்காய்!

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது. காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!.

வெங்காயம் 50 மருத்துவ குணங்கள்!


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,

குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

கேரட் சட்னி!

கேரட் சாப்பிட்டு வந்தால், கண்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். பலர் கேரட்டை அப்படியே சாப்பிடுவார்கள். வேறு சிலரோ அதனை ஜூஸ் செய்து குடிப்பார்கள். ஆனால் இந்த கேரட்டை கொண்டு சட்னி செய்தும் சாப்பிடலாம் என்று தெரியுமா? கேரட் சட்னியானது இட்லி மற்றும் தோசைக்கு அருமையாக இருக்கும். மேலும் காலை வேளையில் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியானதும் கூட. சரி, இப்போது கேரட் சட்னியின் செய்முறையைப் பார்ப்போம். 


தேவையான பொருட்கள்: கேரட் - 4 (துருவியது) சின்ன வெங்காயம் - 8 வரமிளகாய் - 2 கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் புளி - 1 டீஸ்பூன் இஞ்சி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, வரமிளகாய், புளி மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்களானது குளிர்ந்ததும், அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், கேரட் சட்னி ரெடி!!!